உங்களுக்குத் தோன்றியது உண்டா?

                                   
                                                   உங்களுக்குத் தோன்றியது உண்டா?   



       "எட்டயபுரத்தில் இரட்டைப் பிரசவம், நீயும் புதிய தமிழும்"- அப்துல் ரகுமான். தமிழின் பெருமைகளை, சிறப்புகளைப்  பேச விழையும் எவரும் பாரதியை தொடாமல் தமிழைப் பேச முடிவதில்லை. தமிழோடு இரண்டறக் கலந்து விட்டவன் பாரதி. வெறும் 39 அகவை மட்டுமே வாழ்ந்த யுகப் புருஷனைப் பற்றி அவன் மரணமடைந்து ஒரு நூற்றாண்டு கழிந்தும் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்த போதும் அவன் தமிழர்களால் பேசப்படுவான். இதனை முன்னமே அறிந்தவன் பாரதி. அதனால்தான், அவனால் சொல்ல முடிந்தது "சிலுவையிலே அறையுண்டு யேசு செத்தான்- தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்- பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்- பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!" என்று. துன்பச் சூறாவளியில் சிக்கி சுழன்ற போதும், கவலைகளின் மடியில் கண்ணுறக்கம் கொள்ளாமல் 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று வாழ்வின் அழகுகளை ஆராதித்து கொண்டாட நம்மில் எத்தனை பேரால் முடியும்.
தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடிய மனித சமூகத்தில் தன்னை பற்றி சிந்திக்காமல் தன் மண்ணைப் பற்றி மக்களைப் பற்றி சிந்தித்த  தன்னலமற்ற கவி பாரதி. 'எழுத்து தெய்வம்,எழுதுகோலும் தெய்வம்' என்ற இலட்சியம் கொண்ட இலட்சிய கவி பாரதி.
"இரும்புப் பெட்டிகளில் கிடந்த- இலக்கியத்தை- ஏழைகளுக்குப்- பரிமாறியவன் நீ! எழுத்தாணிகளால்- சிலுவையறையப்பட்ட- கவிதைக்கு- நீதான்- மறுவுயிர்ப்பளித்தாய்! என்று  பாரதி குறித்து அப்துல்ரகுமான் சொல்லுவதற்கு இணங்க, பட்டி தொட்டிகளில் உள்ள பாமர மக்களையும் விடுதலை வேள்விக்கான பாடல் கணைகளை உச்சரிக்க வைத்த எழுத்து பாரதியின் எழுத்து.
பெண்ணுக்கு ஞானம் இல்லை, பெண்ணுக்கு யோசித்து செய்கின்ற  அறிவில்லை, பெண் புத்தி பின் புத்தி என்று பெண்ணை ஞானம் அற்றவளாக  சித்தரித்துவந்த சமூகத்திடையே 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் -புவி  பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர்- நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்.’ என்று சொல்லியதால் பெண்ணுக்கு பெருமிதத்தைச்     சேர்த்தது பாரதியின் எழுத்து.
'ஆடுவோமே - பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ விடுதலை பெறுவதற்கு முன்பே, விடுதலை பெறுவோம் என்று தீர்க்கதரிசனம் உரைத்தது பாரதியின் எழுத்து. 'பாதகஞ் செய்பவரைக் கண்டால்- நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா- மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று சிறு குழந்தைக்கும் வீரத்தை ஊட்டியது பாரதியின் எழுத்து. இந்த சமூகத்தில் இன்னும் பல மாற்றங்களுக்கு வித்திட்டது பாரதியின் எழுத்து.
பாரதியை படிக்கும் போதெல்லாம் ஓர் ஆச்சரியம்! பாரதியைப் படிக்கும் போதெல்லாம் ஓர் அதிசயம்! பாரதியைப் படிக்கும் போதெல்லாம் ஓர் புதுமை ஏற்படுவது உண்டு. சமூகத்தில் மடை மாற்றத்தை ஏற்படுத்திய இந்த வீரியமிக்க வார்த்தைகள் ஆற்றல் பிரவாகம் எடுத்து விழும்போது பாரதி எப்படி இருந்திருப்பார் என்று பலமுறை நான் எண்ணியது உண்டு. இது போன்று உங்களுக்கு என்றாவது தோன்றியது உண்டா ?அதற்கு எனக்கு ஒரு நூலின் வழி விடை கிடைத்துவிட்டது.
விடையை அடுத்த பதிவில் தருகிறேன் என் தமிழ் உறவுகளே!
                                                                                                                             ம.பிரபாவதி

Comments

  1. ஆம் தோன்றியதுண்டு.. அருமை சகோதரி, எழுத்துக்கள் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மிக சிறந்த எழுத்து. அறிவை தூண்டிவிடும் தகவல்.

    ReplyDelete
  3. தமிழ் என்றதும் நினைவில் சுழல்வது முண்டாசுக் கவிஞனின் வீச்சுமிக்க வரிகள்.....அருமை

    ReplyDelete
  4. எழுத்து தெய்வம்,எழுதுகோலும் தெய்வம்' மிக நன்று

    ReplyDelete
  5. இனிய எழுத்து அருமை

    ReplyDelete
  6. Arumaiyana sinthanai...vidaikage kathrirukiren...

    ReplyDelete
  7. Entha pennukum tholvi varumpothu nam azhagana meesai Bharathi ninaivil vanthal meendum ezhuval.... Ezhuthukal thodaratum..vazhthukal anni...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதர்வுக்கும் அன்பிற்கும் நன்றி

      Delete
  8. பாரதியின் வரிகளை மீண்டும் வாசிக்க தூண்டிய, உங்களது எழுத்தும், எண்ணமும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. பாரதி மீது கொண்ட பிரியம் தெரிகிறது

    ReplyDelete
  10. பெண்ணின் பெருமையை பாரதியின் கவிதைகளால் அழகுபடுத்திக் கூறிய உன் எழுத்துக்கள் வாழ்க...

    ReplyDelete
  11. இளைஞர் ஜனதா நிகழ்வு ஒன்றில், ஐயா தமிழருவி மணியன் அவர்கள் பாரதி பற்றி ஆற்றிய உரை வீச்சு அவனை அவன் மீது எனக்கு ஒரு பற்றுதலை ஏற்படுத்தியது. அது எனது மகனின் பெயரில் பாரதி என்று பிரதிபலிக்கிறது. பாரதி யுகங்களைக் கடந்தவன். அவனது தமிழ் வேள்வியை தரணிக்கு மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் தங்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment