உங்களுக்குத் தோன்றியது உண்டா? (தொடர்ச்சி)


‘வளர்ச்சியில் சுரணையில்லாதவர்களுடைய முகங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் வளருகிற கொடியைப் பார்த்து ஆனந்தமடையலாம்’ என்று பாரதியார் அடிக்கடி சொல்லுவார், என்று அவரது அன்பர்கள் குறிப்பிடுவதுண்டு.  பச்சைப் பசேலென்று கண்ணைக்கவரும் மரஞ்செடிகளையும், பூத்துப் புன்னகைக்கும் பூக்களையும், ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் அழகிய மணல் பரப்பையும், நம் கால்களைக் கட்டியணைக்கத் துடிக்கும் சிறு கடலலைகளையும், இன்னிசை எழுப்பி இதயத்தை இதப் படுத்தும் பலவண்ணப் பறவைகளையும் பார்த்து இரசிக்க யாருக்குத்தான் விருப்பமில்லாமல் இருக்கும். இயல்பான மானிடர்க்கே இது பிடிக்கும் என்றால் கவிஞருக்கு சொல்லவும் வேண்டுமா! அதிலும் பாரதியோ, ‘காக்கை குருவி எங்கள் சாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று கூத்திட கூடியவன் ஆயிற்றே.
புதுவையைப் புகலிடமாகக் கொண்டபோது, அவனது இரசனைக்கு விருந்தாக, அமைந்தது  முத்தியாலுப்பேட்டையில் அமைந்திருந்த  தோப்பு  தான்.  அந்தத் தோப்பு  தான், எத்தனைப் பேறுப் பெற்றது.   ‘காதல் காதல் காதல், காதல் போயிற் காதல் போயிற், சாதல் சாதல் சாதல்’ என்று உலகக் காதலர்கள் அத்துனைப்பேரும் உச்சரிக்கும் அமர வரிகள் இடம்பெற்ற  குயில் பாட்டு படைப்பானது, இயற்கையின் முழு எழிலும் குழுமியிருந்த அந்த தோப்பில், தொடர்ந்து கூவிய குயிலின் ஓசையை  கேட்டதன் விளைவாக உதயமானது. பாரதியின் பல கவிதை பிரசவங்களைப் பார்த்து பரவசம் கொண்ட அந்தத் தோப்பு பேறு பெற்றது தான்.
அந்தத் தோப்பில்   கவிதைப் பிறக்கும் தருணத்தில் காட்சியளிக்கும்  பாரதியின் சுடர்முகத்தை, சுட்டெரிக்கும் விழிகளை இமைக்காமல் பார்த்து அதிசயித்து நின்றவர் வ.ரா. அவர்கள். இதோ, நாம் புறக் கண்ணால் பார்க்க முடியா இனிய காட்சி,  அகக் கண்ணால் கற்பனை செய்து அகம்மகிழ  வாய்ப்பு தந்த வ.ரா. வின் வரிகளில்,
"தோட்டத்தில் மரங்களையும் செடிகளையும் குளத்தையும் சின்னஞ்சிறு குருவிகளையும் பார்த்தவுடனே, பாரதியாரின் அலுப்பு சலிப்பு எல்லாம் எங்கேயோ மாயமாய் பறந்து போய்விடும். ரசிகத் தன்மை படைத்த உயிருள்ள தோழர்களுக்கு நடுவே இருப்பதாக அவர் எண்ணிக் கொள்வாரோ என்னவோ?  ஸரிக-க-காமா  என்று அவர் வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டால், புதிய புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். மரத்தை வெறித்துப் பார்ப்பார், குளத்தை உற்றுப்பார்ப்பார், ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்பை வெளியே தள்ளி, தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்.  ஸஸ்ஸ- ஸஸ்ஸ- ஸஸ்ஸ என்று மூச்சுவிடாமல் உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம் போடுவார். தவறிப் போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம் மௌனம். ”சொல் ஆழி வெண் சங்கே” என்ற கூக்குரல், கூப்பாடு........ 
குழந்தையைப் பெற்றெடுக்கும் பிரசவ வேதனை தான்.  உற்சாகமும் சோர்வும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு வெளிவருவதைப் பார்க்கக்  கொடுத்து வைத்திருக்க வேண்டும்...புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முரித்துவிடுமோ என்று தோன்றும்......
முத்தையால்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே, நோக்கி நோக்கிக் களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போல - வெறிகொண்டவனைப் போல - சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார். இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாக, பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும்பொழுது அவர், ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா?  குரலிலே ஸரிக- க- காமா, காலிலே தாளம் கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுவதும் அபிநயந்தான் . தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளி காண்பிக்கும்
குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விடும் தாய்மார்களை போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்துபோய், மண் தரையில் படுத்துக்கொள்வார்.....(மகாகவி பாரதியார்; 2001 :76,77).  
என்று விவரித்துக்கொண்டே செல்கிறார். பூமியில் குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மடியும்  எந்த சிருஷ்டியானாலும் அது வலியோடு தான் வெளிவருகிறது. காலம் காலமாய் நிற்கும், நிற்கப்போகும் பாரதியின் நித்தய வார்த்தைகளின் பிறப்பு என்றால் வலியைத்தராமல் பிறந்திருக்குமா என்ன! 
    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
   அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
  வெந்து தணிந்தது காடு - தழல்
   வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
          தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
நன்றி! 🙏🙏🙏 ம.பிரபாவதி


Comments

  1. உணர்ச்சியின் பிரவாகம் கவிஞன். பாரதி, கவிஞன். அந்த வரிசையில் வருபவன், கண்ணதாசன்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள். நன்றி ஐயா.

      Delete
  2. பாரதி என்கிற மா மனிதனின் சிந்தனைகளுக்கு மீண்டும் ஒரு ஊக்கமான் உயிர் உங்கள் எழுத்துக்கள் தந்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி. இது போன்ற உங்களது ஊக்கம், என்னை தொடர்ந்து எழுதத்தூண்டுகிறது.

      Delete
  3. முயற்சி தொடர்ந்து செய்யுங்கள்

    ReplyDelete
  4. பாரதியின் வரிகளில் பாசம் உணர்வு வீர உணர்ச்சி அனைத்தையும் காண முடியும் மகத்தான கவி அவருடைய தோப்பு கவி அற்புதம் அளித்த பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்களது கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  6. உண்மையில் அந்தத் தோப்பு பெரும் பேறுபெற்றது தான்.....வரிகள் அனைத்தும் உணர்ச்சி பிரவாகமாய் உள்ளது. வாழ்த்துக்கள் தோழமையே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழமை.அந்தத் தோப்பைக் காண வேண்டும் என்ற ஏக்கமும் ஏற்பட்டது எனக்கு.

      Delete
  7. அருமை.. பாரதியின் பாதையில் நீங்களும் கவி படைக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  8. ஆஹா அருமையான வரிகள்

    ReplyDelete
  9. பாரதியின் பாடல்களை வாசிப்பதற்கும், பாரதியின் வரிகளை யோசிப்பதற்கும், உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது. இன்னும் ஆழமாக அடுத்த பதிவினை எதிர்பார்க்கும் உங்கள் வாசகன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நல்லதோர் பதிவினைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.

      Delete

Post a Comment