கலையும் கவிஞனும்.....

     

           தமது எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், அனுபவங்களுக்கும் வெவ்வேறு விதமான வடிவங்கள் கொடுத்து அதை வாழ வைப்பவர்கள் தான் காலம் கடந்து நிற்கும் கலைஞர்கள். வார்த்தைகளில் வடிப்பவர்கள் கவிஞர்களாகவும், வண்ணத் தூரிகையால் வார்ப்பவர்கள் ஓவியர்களாகவும், சித்திரத்தைச் செதுக்குபவர்கள் சிற்பிகளாகவும், அபிநயங்களால்  அலங்கரிப்பவர்கள் நிகழ்த்துநர்களாகவும்,  இதயம் வருடும் இசையால் இசைஞர்களாகவும் தங்களுக்கான அடையாளங்களைத் தெரிவு செய்து கொள்கிறார்கள். இப்படி கருத்தை உணர்த்தும் முறையில்தான் கலைஞர்களும் வேறுபடுகின்றனர். கலையும் வேறுபடுகிறது.
           சங்க இலக்கியம் தொடங்கி, சமகால இலக்கியம் வரை கவிஞர்கள் கையாண்ட கவித்துவ ஆற்றலே, அவர்களைக் காலம் கடந்தும் பேச வைக்கிறது. ’சரியான இடத்தில், சரியான வார்த்தை’ இதுதான் கவிதை என்பர். இந்த சரியான வார்த்தையைக் கண்டடைய கவிஞர்கள் படும்பாடு சொல்லில் அகப்படாது.  சிந்திக்கும் வேகத்திற்கு ஏற்றதொரு வார்த்தை வந்து விழும் வரை, கவிஞர்கள் சிந்தனைத் தவிப்பில் சிக்குண்டு சிரமப்படுவர். அலைபாயும் சிறகைப் போல, பம்மி பாய்ந்து விம்மி வெடிக்கும் வார்த்தைகளுக்காகக் கவிஞர்கள் காத்துக் கிடக்கின்றனர். பாரதியின் வார்த்தைப் பிரசவம் எப்படி இருந்தது என்பதை நாம் சென்ற பதிவில் பார்த்திருக்கிறோம்.
         கவிதைகள் ஏட்டில் மட்டுமே இருந்தபோது எல்லோரையும் சென்று அது சேரவில்லை - திரைப்படத்தில் பாடலாக உருமாறியபோது தான் பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்தது.  தமிழ்த் திரையுலகில் இசைப் பாடல்கள் இயற்றிய பாபநாசம் சிவம்  இசையமைப்பாளராகவும், கவிஞராகவும், கதையாசிரியராகவும், பாடகராகவும், நடிகராகவும் விளங்கிய பெருமைக்குரியவர். உடுமலை நாராயணகவி சமூக சீர்திருத்தக் கொள்கைகள் நாட்டில் பரவியிருந்தக் காலகட்டத்தில் தோன்றியவராதலால், அவரால் சமூக சீர்திருத்தக் கருத்துகளை எள்ளல் சுவையோடு அழுத்தமாக எழுத முடிந்தது.
           “எழுத்துக் கலைஞன் தான் திரை உலக அரங்கின் முன் வரிசையில் முதல்வனாக இருப்பவன். அவன் பணிதான் முதற்பணி. முக்கியப்பணி. மனித வாழ்வின் சமுதாயக் கடமைகளையும் சமூக நீதிகளையும் தொகுத்து அறிந்து உணர்பவனே எழுத்துக் கலைஞன்” (திரையுலக அனுபவங்கள்; 1961: 138)  என்பார் முகவை இராசமாணிக்கம். தொடக்ககால திரைப்படங்களில் பாடல் புனைந்து மக்கள் மனதில் நின்ற கவிஞர்கள் மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ்,கம்பதாசன், கொத்தமங்கலம் சுப்பு,  டீ.கே. சுந்தர வாத்தியார் உள்ளிட்ட பலர். இத்தகைய சூழலில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வருகை திரையுலகில் மாபெரும் திருப்பத்தை உருவாக்கியது.  இவர்களுக்கு மத்தியில் கல்யாணசுந்தரனார் தன்னைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக  நிலைநிறுத்திக் கொண்டார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சிப்பீடத்தில் அமரும்போது, நான் அமரும் இந்த முதல்வர் நாற்காலியின் நான்கு கால்களில் ஒன்று பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரனாருக்குரியது என்று புகழாரம் பொழிந்தார்.வெறும் 29 ஆண்டுகளே இந்த பூமிப்பந்தில் சுழன்று வந்த அவர் சாதித்தது என்ன?  அவர் நினைவுகளை அசைபோடும் வண்ணம் அடுத்தப் பதிவு அமையும்.
                                                                                                                 (ம.பிரபாவதி)

Comments

  1. எழுத்தின் வலிமையை உணர்த்தும் ஒரு அருமையான பதிவு.

    ReplyDelete
  2. Its really aowsm....... Tamil is always mass..... Ean thaiyai patri solu eanidam varithai illai.... .Athu pola than ean tamil um.....

    ReplyDelete
  3. பட்டுக்கோட்டையாரை பற்றி தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்.. உங்கள் எழுத்துக்களை பற்றி அடுத்த தலைமுறைகள் எழுத வாழ்த்துகள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பதிவிடுகிறேன் சகோதரா. வாழ்த்தியமைக்கு நன்றி..

      Delete
  4. தமிழ் கவிஞர் அபார சக்தி கொண்டவர்கள் என்றால் மிகையாகாது .....

    ReplyDelete
  5. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் தோழி

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பதிவிடுகிறேன் . நன்றி தோழி

      Delete
  6. எழுத்தின் வலிமையை எடுத்து வைக்கும் அருமையான பதிவு. பாட்டுக்கோட்டை பற்றிய பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. விரைவில் பதிவிடுகிறேன்.

      Delete

Post a Comment