பட்டுக்கோட்டை எனும் பாட்டுக்கோட்டை!

                           




                                 

                   ''காலம் கவிஞனைக் கொன்றுவிடும். அவன் கவிதை காலத்தை வென்று விடும்” (ஜெயகாந்தன்). ஆம். காலம் அவனை 29 ஆண்டுகளே வாழவைத்துக் கொன்று விட்டது. ஆனால், அவனது கவிதையோ அந்தக் காலத்தையே வென்று விட்டது. விவசாயம், மாட்டு வியாபாரி, மீன்-நண்டு பிடிக்கும் தொழிலாளி,தண்ணி வண்டிக்காரன், கவிஞன்,உப்பளத் தொழிலாளி உள்ளிட்ட 17 வகை பரிணாமங்களைக் கண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், சினிமாவில் பாட்டெழுத வந்தது தனக்கு சினிமாதான் தொழில் என்பதற்காக அல்ல.
             'பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்ற பாரதியின் வழியில், 'எத்தனையோ இன்பம் இந்த நாட்டிலே உண்டு; அத்தனைக்கும் பெரிய இன்பம் பாட்டிலே உண்டு’ என்பதைக் கண்டறிந்தவர் கல்யாணசுந்தரனார். எழுத்து படித்தவர்களை மட்டும் தான் சென்றடையும். ஆனால் பாட்டோ பாமர மக்களையும் சென்றடைந்து அற்புதங்களை விளைவிக்கும் என்பதை  அனுபவத்தில் உணர்ந்தவர் அவர்.அதனால் தான், பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அதற்காகவே அவர் திரைப்படத்தில் பாடல் புனைய வந்தார்.
           'தேனாறு பாயுது -செங்கதிர் சாயுது- ஆனாலும் மக்கள் வயிறு காயுது என்ற இரு அடிகள் போதும் கவிஞரின் குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக்காட்ட. விவசாயத் தொழிலாளியாக அனுபவ அறிவைப் பெற்றவராதலால் அவரால் ஏழை விவசாயிகளின் கண்ணீரை இயல்பாகப் பாடல்களில் இறக்கிவைக்க  முடிந்தது. ‘சோகச் சுழலிலே ஏழைச் சருகுகள் சுற்றுதடா - கண்ணீர் கொட்டுதடா! என்று வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் ஏழைகளின் வலியை அவரால் வார்த்தைகளில் வடிக்க முடிந்தது.
            வறுமைதான் அனைத்துப் போராட்டங்களுக்கும் அடிப்படையானது என்பதைப் புரிந்து கொண்ட கவிஞர் 'வசதி இருக்கிறவன் தரமாட்டான் - அத வயிறுப் பசிக்கிறவன் விடமாட்டான்’ என்று குறிப்பிடுகிறார். மேலும், அவரே தனியுடைமை தகர்க்கப்பட்டு பொதுவுடைமை சமூக வாழ்வில் வரும்போது ஏற்றத்தாழ்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் வேலை இருக்காது. நல்ல சமுதாய மாற்றம் சாத்தியப்படுவதற்கு, 'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி எடுக்குற அவசியம் இருக்காது -இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் - பதுக்குற வேலையும் இருக்காது - ஒதுக்
குற வேலையும் இருக்காது.’ என்றும்  அவர் எடுத்துரைக்கிறார்.
            மனித வாழ்வின் வளர்ச்சிக்கு வழிகோலக் கூடியது உழைப்பே என உரைக்கும் கவிஞர், விதியைக் காரணம் காட்டுகிறவர்களை வேகம் நிறைந்த வார்த்தைகளால் வசைப் பாடுகிறார். 'விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும் - வேலை செஞ்சா உயர்வோ மென்ற விபரம் மண்டையில் ஏறணும்’ என்று சாடி விழிப்பணர்வை விதைக்கிறார்.
               மனிதன் சுயநலப் புழுவாய் சகலமும் தனக்கே என்று வாழ்கிறான், இறப்பைத் தழுவும் இறுதி நேரத்தில்  அவன் எடுத்துச் செல்வது ஒன்றும் இல்லை என்ற பிரக்ஞை இல்லாமல்  பொருள் ஆசைப் பிடியில் சிக்குண்டுத் தவிக்கிறான் என்பதை, 'குட்டியாடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம். குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம். தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம். சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடி தான் சொந்தம்’ என்கிறார். இப்படி மிகப்பெரிய விஷயங்களைக் கூட மிக  எளிதாகப் படிப்பறியாப் பாமர மக்களிடமும் எடுத்துரைக்க அவரால் முடிந்தது.
               பொதுவாகக் கவிஞர்கள் ஒவ்வொருவரும் கவிதை உணர்த்தும் முறையில் புதிய புதிய நுணுக்கங்களையும், சில உத்திகளையும் கையாள்கிறார்கள்.  ஆனால் இவர் தன்னை மிகப் பெரிய கவிஞன் என்று ஒருபோதும் பாவித்தவரில்லை.  இவர்தம் பாடல்களில் எதுகை மோனை மிகுந்து, ஓசை நயம் ஓங்கி இருக்கும் என்றும், இலக்கணக் கூறுகள் மிக இயல்பாய் பொருந்தி இருக்கும் என்றும், உருவகங்கள் உயர்ந்து நிற்க்கும் என்றும் பிறர்  சொல்லிப் புகழ வேண்டும் என்பதற்க்காக எந்த வரையறையையும் வரைந்துகொண்டவருமில்லை.
                  ஏழை மக்களின் நாடி நரம்புகளில் பின்னலாடும் நாடோடி வடிவங்களில் தான், சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புகளையும், மனவலிகளையும், உணர்ச்சிப்பெருக்குகளையும்  உள்ளதை உள்ளவாறு சொல்ல முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர் அவர்.
                 தான் எடுத்துரைக்கும் கருத்துக்கு வலு சேர்க்கும் வார்த்தைகள் மக்களுக்கு அந்நியமாய் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்கள் காலங்காலமாய் பயன்படுத்திய, அவர்களோடு ஒன்றிணைந்துவிட்ட, நம் மண் சார்ந்த  நாட்டார் இலக்கிய வடிவங்களையே கையாண்டார். இந்த உத்திமுறை  தான், மிக குறைந்த ஆண்டுகளே  திரைத்துறையில் பாடல்புனைந்த  அவரை இன்றும்  நினைக்க வைக்கிறது.
                எல்லைகட்கு அப்பாற்பட்டு மனித சமூதாயத்தைச் சிந்தித்த சிந்தனைக் கவிஞர் பட்டுக்கோட்டையார். சமூதாயத்தின் ஆணிவேர் எது என்றும், தான் எதைப்பாட வேண்டும் என்றும் தீர்க்கமான முடிவு கொண்டிருந்தார். காட்சிகளுக்கேற்றவாறு பாடப்படுகிற திரைப்பாடல்களிலும் கூட தம் கருத்தைப் பொருத்தமாக  இட்டு நிரப்பிய கவிஞர் அவர். சமத்துவம், ஒற்றுமை, உழைப்பாளரின் வாழ்வு மலர்ச்சி, பொதுவுடைமை இவற்றைத் தாரக மந்திரங்களாகக் கொண்டு பாடல் புனைந்த  மகத்தான மக்கள் கவிஞர் அவர்.
                  சின்னஞ் சிறு சிறாரிடம்  சேதி சொல்ல வரும்போது கூட, ‘மனிதனாக வாழ்ந்திட வேணும், மனதில் வையடா - தம்பி மனதில் வையடா. வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ வலது கையடா. நீ வலது கையடா. தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா! என்று,  தான் பாடல் புனைய வந்த நோக்கத்தை வாய்ப்பு வரும் இடங்களில் எல்லாம் தவறாமல் பதிவிடுகிறார். தனியுடைமைக் கொடுமைகள் தீர, நாம்  ஒவ்வொருவரும் மனிதராக வாழவேண்டும். மனிதராக வாழும் பொழுது தான் மற்றவர்களின் வலிகளைப் புரிந்துக்கொள்ள முடியும். அப்போது தானாகவே அங்கு தனியுடைமைக் கொடுமை இருக்காது என்பதைத் தெளிவுப்படுத்துகறார்.
                காலத்தால் அழிக்க முடியாத, எந்தக் காலத்தோடும் பொருத்திப் பார்க்கக்கூடிய பாடல் வரிகளை விட்டுச்சென்ற பட்டுக்கோட்டையெனும் பாட்டுக்கோட்டையாரை அசைப்போட அவரது அமர வரிகளில்  சில உங்கள் பார்வைக்கு,
                              ‘திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’,‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்’,‘காயும் ஒரு நாள் கனியாகும், நம் கனவும் ஒருநாள் நனவாகும்’, ‘பட்டப்பகல் திருடர்களைப் பட்டாடைகள் மறைக்குது - ஒரு பஞ்சையத் தான் எல்லாம் சேர்ந்து திருடனென்றே ஒதைக்குது’,பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும்போது பொருளில்லை - பொருளும் புகழும் சேர்ந்த பின்னே பொதுப்பணியில் நினைவில்லை’......... 
        செவிக்கு மட்டுமில்லாமல், சிந்தனைக்கும் விருந்தாகும், வர்க்க பேதமற்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் அற்புதமானக் கருத்துக்களை பாடல்களின் மூலம் பட்டுக்கோட்டையாரைப்போல சினிமாவில் கொண்டு வந்து சேர்த்தவர், அவருக்கு முன்னும் ஒருவருமில்லை; பின்னும் ஒருவருமில்லை.

                                                                                                                                       ம.பிரபாவதி                                                     
                                                                                      

Comments

  1. அருமையான பதிவு...

    ReplyDelete
  2. பட்டுபொள் அழகாக நெய்தெடுத வரிகள்.
    ஒரு பாடலின் முக்கியத்துவம் என்ன.அதன் வரிகள் எந்த அளவிற்கு சிந்தனையை தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான திரு.பட்டுகொட்டயாரின் பெருமைகளை உங்கள் எழுதால் மேலும் பெருமை அடைய செயுதுளீர்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.உங்கள் கருத்தை கவிதையாக்கிவிட்டீர்கள்...

      Delete
  3. பாட்டுக்கோட்டைக்கு ஓர் அற்புதமான பாமாலை புனைந்து உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. பொதுவுடமைக்கு உருவம் தந்த நாடுகளே உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் இந்த யுகத்தில் சிந்தனைகளை மீண்டும் கிளர வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  4. கண்களுக்கும் சிந்தனைக்கும் விருந்தளித்ததற்க்கு நன்றி சகோதரி

    ReplyDelete
  5. தத்தவப்பாடல்களின் வரிசையில் பட்டுக்கோட்டையார் பாடல்களுக்கு தனிமதிப்புண்டு....வாழ்த்துகள் தோழமையே...!!!

    ReplyDelete

Post a Comment