பாரதியும் தமிழும்

                                                          

                                                       


                                                          

   'ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?’

என்று பாரதி கேட்பது, பாரதிக்கும் பொருந்தும்.  நாட்டிலே கவிஞர்கள் காலந்தோறும் தோன்றாமல் இல்லை.  தோன்றினார்கள், அவர்கள் அத்தனை பேரும் காலம் கடந்து நின்றார்களா…..  என்றால் அதில் வெகு சிலரை மட்டுமே விரல்விட்டு எண்ணிவிடும் தமிழ்ச்சமூகம்.  இந்த நிலையை இட்டு நிரப்ப வந்த மாமணி தான் பாரதி.

 தமிழன்னையின் தவப்புதல்வனாய் அவதரித்த அவன், தமிழை எப்படி  எப்படியெல்லாம் நேசித்தான் என்பதை அவனது எத்தனையோ கவிதைகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

 பல மொழிகளைக் கற்று அறிந்த அவன், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிது எங்கும் இல்லை என்றான்.

 குழந்தைகளுக்குச் சொல்லித் தரும் வேளையிலும், சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்றான்.

 நலம் பெற வேண்டும் என்றால் எங்கும், எதிலும் தமிழ் இருக்க வேண்டுமாம் அதை , ஒரு சொல் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்றும் சொன்னான்.

 இப்படி எத்தனையோ கவிதைகளில் தமிழின் சிறப்பை,  தமிழின் தேவையைத் தெளிவாக எடுத்துரைத்தவன் பாரதி. தமிழை நேசித்தவன் மட்டுமல்ல, தமிழை சுவாசித்தவன் பாரதி என்றால்  கூட அது மிகையாகாது.  

         வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

                         மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்

கானில் வளரும் மரமெலாம் நான்

காற்றும் புனலும் கடலுமே நான்’’

 என்று செம்மார்ந்த செருக்குடன் கவிதை உலகை ஆட்சி செய்தவன் பாரதி.

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத்

தமிழ் மொழியை புகழி லேற்று

கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

வசை யென்னாற் கழிந்த தன்றே!

என்று தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட வசையைப் போக்க வந்துதித்த கவியரசராக கவிதை உலகில் சஞ்சரித்த பாரதியின் நிஜ உலகு அவனது கவிதை உலகைப் போல் உவகையளிக்கவில்லை. வறுமையின் பிடியில் சிக்குண்ட பாரதியால் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட சரிசெய்ய இயலாமல் போனது.  குழந்தை நோய்வாய்பட்டுக் கிடக்கையில் குழந்தைக்கு மருத்துவம் செய்ய போதியப் பணமில்லாமல் அவன் புலம்பித் தவித்ததுண்டு.

            இப்படியான ஒரு சூழலில்  பணம் அனுப்பி உதவுமாறு  தம்பி பரலி சு. நெல்லையப்பருக்கு  ஒரு கடிதம் எழுதுகிறார். அதில்   'எங்கேனும், எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கு பணம் அனுப்புக.   தம்பி உனக்கேனடா இது கடமை என்று தோன்றவில்லை? நீ வாழ்க’. என்று  கவியரசர் பாரதியின் கடிதத்தை வாசிக்கும்போதே இதயம் கனக்கிறது.

            அப்படி வறுமையில் எழுதப்பட்ட அக்கடிதத்தில் கூட,  தமிழ் குறித்து அவனுக்கு இருந்த சிந்தனையை விதைக்கிறான். அவனது சிந்தனையில் சில வரிகள் உங்கள் பார்வைக்கு,

தமிழ், தமிழ், தமிழ்  - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க.  ஆனால் புதிய செய்தி, புதிய, புதிய யோசனை, புதிய, புதிய உண்மை, புதிய, புதிய இன்பம்  - தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும். தம்பி, நான் ஏது செய்வேனடா!    தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தம் உண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை.  தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக்  கண்டால் என் மனம் புண்படுகிறது. (ரா..பத்மநாபன்: 1982; 53,54)

 இப்படி  மகிழ்விலும், வறுமையிலும், வாழ்விலும், சாவிலும்  எப்போதும் தமிழையே சிந்தித்தவன் பாரதியைத் தவிர வேறு யார் இருக்க முடியும்.     

நன்றி!                                                         .பிரபாவதி

 

 

 


Comments

Post a Comment